Sunday, December 19, 2010

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி - TPV3

இது ஒரு மீள்பதிவு, அதே சமயம், பாசுர விசேஷத்தையும் சில படங்களையும் புதிதாகச் சேர்த்திருக்கிறேன்.
வாசிக்க:
மார்கழித்திங்கள் மதி நிறைந்த
வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்

திருப்பாவையின் மூன்றாம் பாடல் உத்தமனைப் பாடி நோன்பு எடுப்போர் அடையும் பெரும் செல்வங்களைப் பற்றிப் பேசுகிறது!ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்,
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து,
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகள,
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோரெம்பாவாய்!"வாமனாவதாரத்தில் மஹாபலியிடம் மூன்றடி மண்ணை இரந்து பெற்று, விஸ்வரூபமெடுத்து, மூன்று உலகங்களையும் தன் திருப்பாதங்களால் அளந்த புருஷோத்தமனுடைய நாமத்தைப்போற்றிப் பாடி, பாவை நோன்புக்கு வேண்டி அதிகாலை நாங்கள் நீராடினால், பிணி, பஞ்சம் போன்ற தீங்கினால் நலிவுறாமல், நாடு முழுவதும் மும்மாரி மழை பெய்திடும். அதனால் செழித்து வளர்ந்த சிவந்த நெற்பயிர்களுக்கு நடுவே கெண்டை மீன்கள் துள்ளி விளையாடும். அங்குள்ள நீலவண்ணக் குவளை மலர்களில் புள்ளி வண்டுகள் உறங்கும். வள்ளல் குணம் கொண்ட பசுக்கள் பாலை சிறிதளவும் தேக்கிக் கொள்ளாமல், கறப்பவரின் கை தங்கள் பெருத்த மடியில் பட்ட மாத்திரத்திலேயே பாலைக் குடம் நிறைய சுரக்கும். இங்கனம், அழியாத செல்வம் எங்கும் நிறைந்து காணப்பெறும்."

பாசுர விசேஷம்:

முதல் பாசுரத்தில் வைகுந்தநாதனான நாராயணனையும், 2வது பாசுரத்தில் பாற்கடலில் பையத்துயின்ற பரமனான வியூக மூர்த்தியையும் போற்றிப் பாடிய ஆண்டாள், இப்பாசுரத்தில் ஓங்கி உலகளந்த உத்தமன் ஆன விபவதார மூர்த்தியைப் பாடுகிறாள்!

திரிவிக்ரமனே புருஷோத்தமன் (புருஷ உத்தமன்), அதாவது, பரமன் வாமனனாகி மூவுலகை அளந்த காலத்தில், அவனது திருவடியானது, அடியவர்-கொடியவர் என்று பாராமல் அனைத்து உயிர்களையும் தொட்டு கடாட்சித்தது.

வாமனன் எப்படி புருஷ உத்தமன் ஆகிறான்?
தானும் அழிந்து பிறரையும் சேர்த்துக் கெடுப்பவன் அதமாதமன்.
பிறரை அழித்துத் தான் வாழ்பவன் அதமன்.
பிறரும் வாழத் தானும் வாழ்பவன் மத்யமன்.
தான் அழிந்தாலும்/அவமானப்பட்டாலும் பிறரை வாழ்விப்பவன் உத்தமன். தனக்கென்று வாழாமல் பிறர்க்கேயாக இருப்பவன் உத்தமன்.

"பேர் பாடி" என்பதிலும் சிறப்பு உள்ளது. பரமனின் திருநாமமானது நாமியைக் (பரமனை) காட்டிலும் உயர்ந்ததாக நாச்சியார் குறிப்பில் உணர்த்துகிறார்! அதாவது, பரமன் உருக்காத பொன் போன்றவன், அவன் திருநாமமோ பொன்னால் செய்யப்பட்ட அழகான ஆபரணம் போன்றது என்று பெரியோர் கூறுவர்!

"தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரிப் பெய்து" எனும்போது நிலம் செழித்து, மாந்தர் நலமுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ மழை எவ்வாறு பொழிய வேண்டும் என்பது அழகாக சொல்லப்பட்டுள்ளது:

1. தடங்கலின்றி பெய்ய வேண்டும்
2. நாடு முழுதும் பெய்ய வேண்டும்
3. ஒரு மாதத்தில் 9 நாட்கள் வெயில், 1 நாள் மழையென மாதம் மூன்று நாட்கள் பெய்ய வேண்டும் (ராம ராஜ்யத்தில் இப்படித் தான் மழை பெய்ததாம்!)

"மும்மாரி" என்பது வாமன அவதாரத்துடன் சம்பந்தமுடைய மூன்று தீர்த்தங்களைக் குறிப்பதாக ஒரு உள்ளர்த்தமும் உண்டு. அதாவது, மகாபலி தானத்திற்கு முன் பரமனின் கையில் இட்ட நீர், ஓங்கியுலகளந்த த்ரிவிக்ரமனின் திருவடிகளை அலம்பிய பிரம்மனின் கமண்டல நீர் மற்றும் பரமனின் திருவடி வீச்சில் அண்டக்கூடு (cosmic shell) உடைந்து உருவான ஆகாச கங்கை நீர்! அப்படி விஸ்வரூபமெடுத்த பரந்தாமனை ஜாம்பவான் அவசர அவசரமாக பிரதட்சிணம் செய்தாராம்!

கங்கை நீர் மண்ணுலகு வரக் காரணமாக இருந்த உலகளந்த வாமனனை உலகு செழிக்க மழை தர வேண்டுவது பொருத்தமான ஒன்று தான்! அது போல வேதத்தில் அதிக இடங்களில் குறிப்பிடப்படுவதும் த்ரிவிக்ரம அவதாரமேயாம். முதலாழ்வார்களான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வாரின் முதல், இரண்டாம், மூன்றாம் திருவந்தாதிகள் த்ரிவிக்ரமன் எழுந்தருளியுள்ள திருக்கோவலூரில் தான் அருளிச்செயல்களாக அரங்கேறின.

கோதை நாச்சியார் ஏன் பூர்ண அவதாரங்களான ராம-கிருஷ்ண அவதாரங்களைப் பாடாமல், த்ரிவிக்ரமன் பேர் பாடச் சொல்கிறாள்? இதே த்ரிவிக்ரம அவதாரத்தை 17வது பாசுரத்திலும்(அம்பர மூடறுந்தோங்கி உலகளந்த உம்பர் கோமானே) என்றும், 24வது பாசுரத்தின் முதலடியிலும்(அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி!) என்றும் ஆண்டாள் போற்றுகிறாள்! காரணம் இருக்கிறது! ஸ்ரீராம-கிருஷ்ண அவதாரங்களில் முறையே ராவணன், கம்சன் தவிரவும் பல அசுரர்களை பரமன் வதம் செய்கிறார். கண்ணன் மேல் மையல் கொண்டிருந்தாலும், அன்பே உருவான பூமிதேவியான (பிரேம சொரூப ஜகன்மாதா!) ஆண்டாளுக்கு (மகாபலியை அழிக்காமல், அவன் அகந்தையை அழித்து, அவனைத் திருத்தி தடுத்தாட் கொண்ட) கருணை வடிவமான வாமன அவதாரமே உகந்ததாகப் பட்டது!


ராம அவதாரத்திலேயே தண்டகாரண்யத்தில் ரிஷிகளின் யாகத்துக்கு தடங்கல்கள் செய்த அசுரரை ராமர் வதம் செய்தபோது, பிராட்டி அதை விரும்பாமல், ராமருடன் வாதம் செய்திருக்கிறாள்!

பரந்தாமன் வாமன அவதாரமெடுத்து, மன்னன் மகாபலியிடம் மூன்றடி மண் தானம் பெறச் சென்றபோது, தன் மார்பில் குடியிருந்த திருமகளின் கடாட்சம் மகாபலிக்கு கிட்டிவிட்டால், தான் சென்ற காரியம் நிறைவேறாது என்றுணர்ந்து, தன் மார்பை உத்தரீயத்தால் (மேற்துணி) மறைத்துக் கொண்டு சென்றதாக கதாகாலட்சேபத்தில் கேட்டதுண்டு! திருமகளை வைகுந்தத்தில் விட்டுவிட்டுச் சென்றிக்கலாம் தான்! அவ்வாறு சென்றிருந்தாலும், திருமகள் உடன் இல்லாத பரமனுக்கு தானம் கிடைத்திருக்காது! அந்தப் பரந்தாமனுக்கே என்ன ஒரு காட்ச்-22 நிலைமை, பாருங்கள் :-) அதனாலேயே, பரமன் பிரச்சினையை உத்தரீயத்தை வைத்து சமாளிக்க வேண்டியிருந்தது!

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப - இவ்வரிக்கு கவித்துவமான விளக்கமுண்டு. தாமரை மலர்த்தேனை முட்டக்குடித்த ஆண்வண்டானது, உண்ட மயக்கத்தில் மலரின் நடுவிலேயே உறங்கி விட, மாலையானவுடன் தாமரை இதழ்கள் மூடிக்கொண்டு விட, வண்டு மாட்டிக் கொண்டு மலருக்குள்ளேயே இரவைக் கழிக்க வேண்டியதாகிறது! சூரிய உதயத்தில் தாமரை மீண்டும் மலர, ஆண்வண்டு பெண்வண்டிடம் ஒட, இரவு முழுதும் காத்திருந்த பெண்வண்டு, ஆண்வண்டின் நடத்தையை சந்தேகிக்க, ஊடல் பின் கூடல்!


ஆண்டாள் என்ற கவிதாயினி இயற்கையை ஆராதிக்கும் அழகு,

ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகள,
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்


இப்பாசுரத்தில் வெளிப்படுவதைக் காணலாம்! இயற்கையோடு இயைந்து வாழ்தலே மாந்தர்க்கு நன்மை பயக்கும், இயற்கைச் செல்வம் பேணப்பட வேண்டிய அவசியம் ஆகிய அறிவியல் செய்திகளை பல நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு சிறு பெண் அருமையாகக் கூறிச் சென்று விட்டாள்.

பாசுர உள்ளுரை:


1. ஆண்டாள் நாச்சியார் இப்பாசுரத்தில், "உத்தமன் பேர் பாடி" என்று கூறுவது, பெருமாளின் புகழைப் பாடுவதை விட, அவனது திருநாமத்தைப் (அஷ்டாட்சர மந்திரம்) பாடுதல் தான் சிறந்தது என்ற உள்ளர்த்தத்தை உடையது!

2. முதல் பாசுரத்தில், அஷ்டாட்சர மந்திரத்தையும், இரண்டாவது பாசுரத்தில் த்வய மந்திரத்தையும் கொண்டாடிய ஆண்டாள், இம்மூன்றாம் பாசுரத்தில், கீதாசார்யனின் சரம சுலோகத்தின் (மாமேகம் சரணம் வ்ரஜ - மோக்ஷயிஷ்யாமி மாசுச ஹ) செய்தியை முன்னிறுத்துகிறார்.

இந்த மூன்றையும் கைக் கொண்டாலே, பரமனை அனுபவிக்கவும்,மோட்ச சித்தியைப் பெறவும் அடியவர் பாத்திரமாகிறார்.

அஷ்டாட்சரம், த்வயம், சரம் சுலோகம் ஆகிய மூன்றும் முறையே தாரகம், போக்யம், போஷகம் என்பதாகச் சொல்லலாம். சரீர நோக்கில் பார்க்கையில்,
தாரகம் - உணவு
போக்யம் - பால், நெய்
போஷகம் - வெற்றிலை, சந்தனம் (தாம்பூலம்)

ஆக, அஷ்டாட்சரம், த்வயம், சரம் சுலோகம் என்ற மூன்று மட்டுமே அடியாரின் ஆத்மசுத்திக்கு போதுமானவை; பரமனின் கல்யாண குணங்களை அனுபவிப்பதற்கு, மோட்ச சித்திக்கும் ஆதாரமானவை. ஆக,கர்ம ஞான யோகங்களைக் காட்டிலும், பக்தி யோகமே சிறந்ததாக நாச்சியார் குறிப்பிலுணர்த்துகிறார்.

இன்னும் சற்று எளிமையாக சொல்ல வேண்டுமானால், முதல் பாசுரத்தில், கோபியர்களை விரதத்திற்கு அழைப்பதாகவும், இரண்டாவதில், விரதத்தின் போது செய்யத்தக்க / தகாதவற்றை எடுத்துரைப்பதாகவும், இந்த மூன்றாவது பாசுரத்தில், விரதத்தின் நற்பலன்களை சொல்வதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

3. பாபங்கள் அணுக முடியாதவன் பரமன் என்பதால், "உத்தமன்" என்று பாசுரத்தில் போற்றப்பட்டுள்ளார்!

4. 'சாற்றி நீராடினால்' என்பது சரணாகதி உபதேசத்தை உட்பொருளாகக் குறிக்கிறது.

5. 'மும்மாரி' என்பது மூன்று வகைப்பட்ட பகவத் காரியங்கள் வாயிலாக, நோன்பின் சரணாகதிப் பலனை பெற முடியும் என்பதை வலியுறுத்துகிறது. அதாவது,
அ) ஆச்சார்ய உபதேசம்
ஆ) திவ்யப் பிரபந்தப் பாசுரங்களைப் பாடுதல்
இ) திவ்ய தேசங்களுக்கு சென்று பரந்தாமனை வழிபடுதல்

6. "ஓங்கு பெருஞ்செல்நெல் ஊடுகயல் உகள" --- செந்நெல் வயல்களில் துள்ளி விளையாடும் மீன்கள், தங்கள் உபதேசங்கள் பலனளிப்பதைக் கண்டு மகிழ்வுறும் ஆச்சாரியர்களை உட்பொருளாகக் குறிக்கிறது.

7. "பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப" என்பதில் சுட்டப்படும் வண்டு, அடியவர் நெஞ்சத்தில் (யோக நித்திரையில்) உறைந்திருக்கும் வைகுந்தப் பெருமானைக் குறிக்கிறது.

8. "தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி வாங்க" என்பது ஆச்சார்யனின் வாத்சல்யத்தால் ஈர்க்கப்பட்ட சீடர்களை உட்பொருளாகக் கொண்டுள்ளது.

9. "வள்ளல் பெரும்பசுக்கள்" தயாள குணம் உடைய, பிரதிபலனாக எதையும் எதிர்பார்க்காத ஆச்சார்யர்களைக் குறிக்கிறது.


10. "நீங்காத செல்வம்" என்பது (திருமகளின் பரிந்துரையின் பேரில், அடியவர்க்கு பெருமாள் அருளும்!) பூவுலகில் வாழும் காலத்தில், குன்றாத ஞானத்தையும், அதன் பலனால் கிட்டிய மோட்ச சித்தியையும் குறிக்கிறது. ஏனெனில், மற்ற எல்லா செல்வங்களும் நீங்கக் கூடிய செல்வங்கள் ஆதலால் !


என்றென்றும் அன்புடன்
பாலா

19 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

test ...

வடுவூர் குமார் said...

விளக்கம் நன்றாக இருக்கு.

enRenRum-anbudan.BALA said...

வடுவூர் குமார்,
வாசிப்புக்கு நன்றி.

எ.அ.பாலா

Mangai said...

நன்றாக இருந்தது விளக்கம். காஞ்சிபுரத்தில் இருக்கும் உலகளந்த பெருமாள் கோவில் பார்த்து அந்த பிரம்மாண்ட உருவச் சிலை பார்த்து மெய் சிலிர்த்த அனுபவம் உண்டு.

enRenRum-anbudan.BALA said...

mangai,

வாசிப்புக்கு நன்றி.

எ.அ.பாலா

ச.சங்கர் said...

பாலா

இதற்கும் ஒரு சுவையான விளக்கம்.

ஒரு ப்ரசங்கத்தில் இந்தப் பாசுர விளக்கம் சொல்லும் போது பக்கத்திலிருந்த ஒருவர் ஏங்க " ஓங்கி உலகளந்த உத்தமன் " பேர்பாடியா " (bare bady-வெற்றுடம்பு)தான் போனாரா என்று கேட்டாராம்.

அப்போது உபன்யாசகர் " இல்லை , அவர் bare bady யுடன் போகவில்லை ..மேலே உத்தரீயம் என்று சொல்லக் கூடிய மேலங்கி அணிந்துதான் சென்றார் " என்றாராம்

உடனே கேள்வி கேட்டவர்" அதெப்படி அவ்வளவு தெளிவாக அறுதியிட்டு சொல்கிறீர்கள் " என்று கேட்டாராம்

அந்த உபன்யாசகர் சொன்ன விளக்கம்

" மஹாவிஷ்ணு வாமனாவதாரம் எடுத்து மாவலியை காணச் சென்றது..அவனது இந்திர பதவி ஆசையை அழித்து, அவனது இகலோக பற்றறுத்து அவனை உய்விப்பது..அதை செய்ய மகாபலிக்கு செல்வத்தின் மீதிருக்கும் பற்று முதலில் ஒழியவேண்டும்.அதற்காகத்தான் அவனிடம் உள்ள அனைத்து இகபர செல்வங்களையும் அகற்றி அவனை பற்றற்றவனாக்க அவனிடம் யாசகம் பெறச் செல்லுகிறார்.ஆனால் அப்படி செல்லும் போது அவரது வலது மார்பில் உறைந்திருக்கும் மஹாலட்சுமியின் கடைக்கண் பார்வை பட்டாலே மஹாபலிக்கு மேலும் செல்வம் குமியுமே தவிர குறையாது. பின் அவன் என்றைக்கு செல்வத்தின் மீதான பற்றை அறுப்பது? அதனால்தான் வாமனனாக செல்லும்போது உத்தரியத்தால் வலப்பக்கத்தை (அதாவது-மஹாலட்சுமியை , அவளது அருட்பார்வை மஹாபலிக்கு கிடைத்து விடாமல்) மறைத்துக் கொண்டு சென்றார் " என்று ஒரு போடு போட்டாராம்

"இது எப்படி இருக்கு ?" :)

enRenRum-anbudan.BALA said...

சங்கர்,

இது நிஜமாகவே அருமையான ஒரு பதிலடி :)

உத்தரீயத்தின் பின்னால் இப்படி ஒரு சுவையான சங்கதி உள்ளதை அறியக் கொடுத்ததற்கு மிக்க நன்றி.

வாழ்க :)

எ.அ.பாலா

cheena (சீனா) said...

கண்ணன் கள்வன் - மகாபாரதத்தில் அவன் செய்யாத கள்ளத்தனமா ?? இங்கும் பாவம் மாவலி - மகாலஷ்மியின் பார்வையைக் கூட உத்தரீயத்தால் மறைக்கிறானா ?? ம்ம்ம்ம்ம்

வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்

மடியில் கை வைத்த உடனே குடம் நிரம்ப பால் கொடுக்கும் வள்ளல் பசுக்கள் - ஆண்டாளின் அழகு தமிழ் விளையாடுகிறது.

அருமையான விளக்கம் பாலா

enRenRum-anbudan.BALA said...

cheena,
varukaikkum, paaraattukkum mikka nanRi !

thiruppaavai viLakkap pathivukaL thotarum :)

siddhan said...

அன்பு நண்பரே,
ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவையில் எனக்கு மிகவும் பிடித்த பாசுரம் இதுதான்."நீங்காத செல்வம் நிறைந்தேலோர்" என்று எங்கும் வளம் பொங்க வாழ்த்தும் இந்த பாசுரத்திற்கு தங்கள் விளக்கம் அருமை.

குமரன் (Kumaran) said...

விளக்கம் ரொம்ப அருமையா இருக்கு பாலா. இந்தப் பாசுரத்தைக் கோவில்களில் பிரசாதம் தரும்போது அர்ச்சகர்கள் ஓதுவதைக் கேட்டிருக்கிறேன். நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய் என்று வருவதால் என்று நினைக்கிறேன்.

enRenRum-anbudan.BALA said...

ஆண்டாள் திருவடிகளே சரணம்..

enRenRum-anbudan.BALA said...

Expanded the description and added some more pictures in this Thiruppaavai posting!

passerby said...

ஆண்டாள் பாடல், பாடலின் விளக்கத்தைவிட சுவையோ சுவை. தமிழ்விரும்பிகள் மய்ங்காமலிருக்க முடியாது.

பாடலின் விளக்கங்கள் very elitist.

பாமரமக்கள் இதையெல்லாம் தெரிந்துகொள்கின்ற்னரா என்பது வியப்பே.

முதலின் தமிழ் தெரிய வேண்டும். நான் சொல்வது இலக்கியத்தமிழ். பின்னரும் அதை விளக்கும் பாலாக்கள் அவர்களுக்குத் தேவை.

ஆழ்வார்கள் எளியவர்களுக்குத்தான் எழுதினார்கள் என்று நினைக்கிறேன். இல்லாவிடில் வடமொழியிலே எழுதியிருப்பார்கள். ஆனால், ஆழ்வார்கள் எளியமக்களிடமிருந்து விலகியது அவர்கள் காலத்திற்குப்பின் சிலநூற்றாண்டுக்களுக்குள்ளே they have gone to serve the elite society. No hope they will ever return to their original place namely, the society of common Tamils.

Not yours, but so many have I read on paasurams as purporting to be their interpretations; elucidations; clarifications. The more I read, the deeper my pain. You are serving me here: but who will serve them? Today, no one from the common masses care for the historic figures named Alvaars.

Well, be that as it may. Let me come to your explanations. They are very interesting. Thanks.

Some comments:

The explanation given to Uththaman under பாசுர விசேஷம் equates the God to human level.

//தனக்கென்று வாழாமல் பிறர்க்கேயாக இருப்பவன் உத்தமன்//

There never is a question of God 'living'!

I think there must be an explanation which ought to be careful in attributing human characteristics to God.

A further point needs your elucidation. That emanates from your following words:

//புருஷோத்தமனுடைய நாமத்தைப்போற்றிப் பாடி, பாவை நோன்புக்கு வேண்டி//

It means that they recite the names of their Lord and take the fast called பாவை நோன்பு.

What is that Nonbu? What is that paavai?

Paavai means...?

Is it something else different from the Uththaman?

So, recitation of uththaman helps in carrying out the Nonbu?

If so, aren't the two different, and the former serves only as a help to carry out the latter? and in that case, the latter assumes greater significance?

These undesirable questions persist in the absence of explanation as to what that NONBU is.

No doubt you will go out and find that out, deeply immersed that you are in paasurams and their arcane interpretations although heard from learned scholars in upanyaasams as you said here. Please go ahead and tell us.

Waiting.

enRenRum-anbudan.BALA said...

கள்ளபிரான்,

வாசிப்புக்கும் கருத்துக்கும் நன்றி.

////தனக்கென்று வாழாமல் பிறர்க்கேயாக இருப்பவன் உத்தமன்//

There never is a question of God 'living'!
//

புருஷோத்தமனான பரந்தாமன் தனக்கென்று "இல்லாமல்" - இப்படி எழுதியிருக்க வேண்டும் நான். பூர்ண அவதாரங்களான ராம-கிருஷ்ண அவதாரங்களுக்கு "வாழுதல்" (Living) பொருந்தும் என்று பெரியோர் கூறுவர்.

பாவை நோன்பு: Pl see the links below for additional information.
http://www.hindu-blog.com/2008/12/pavai-nombu-during-margazhi-month.html

நல்ல துணைவன் அமைய பெண்கள் காத்யாயனியை (துர்கை) வேண்டி விரதமிருப்பது. இங்கு ஆண்டாளும்/கோபியரும் அரங்கனே கணவனாக வர வேண்டுவதால், பரமன் புகழையும் பாடி விரதத்தை அனுசரிப்பதாகக் கொள்ளுதல் சரியாக இருக்கும். நன்றி.

passerby said...

நல்ல துணைவன் அமைய பெண்கள் காத்யாயனியை (துர்கை) வேண்டி விரதமிருப்பது. இங்கு ஆண்டாளும்/கோபியரும் அரங்கனே கணவனாக வர வேண்டுவதால், பரமன் புகழையும் பாடி விரதத்தை அனுசரிப்பதாகக் கொள்ளுதல் சரியாக இருக்கும். நன்றி.//

I read the link. It has been corrected by someone with the name srimannarayandaasan - CORRECTLY.

I already knew the nonbu - to whom it was addressed as explained in the link.

But that nonbu follows the tradition of North India.

But Andal's harks back to ancient Tamil tradition. In this tradition, which was the goddess or god who was addressed the women?

I don't know who you are: a common Hindu who delights in reading the passurams and write on them, as you do here? or a pukkaa srivaishnava who takes the paasuram differently?

In case you are the latter, the very notion of Andaal offering workship to Durga in order to get Lord Rangan as her husband - is abhorrent. You wont dare to do that thing.

They wont accept it at all. They wont take it at all.

This is exemplified in the reply given in the link by Srimannarayan daasan, who gave the version of Srivaihsnavaas namely, Andal did not worship Durga.

According to Srivaishnavite scholars, and also, Tamil scholars, Andal's nonbu has nothing to do with North Indian nonbu. It is from ancient Tamil tradition in which, too, a goddess was taken in a form of clay model and offered worship. Some call it அம்மானை நோன்பு.

According to Srivaishnavite scholars, Andal has customised that tradition to worship Rangan even in this paavai nonbu.

I asked you pointedly who that paavai is, since she says

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்,

It means that 'reciting the namas of Lord Vishnu, we adorn the paavai"

Who is that paavai? Are Tamil scholars and Srivaishna schlars right in saying that the pavai too is Lord Rangan? Or, another goddess?

In latter case, it is unacceptable for those who take Andaal as an avataar of piraatti.

PLEASE NOTE: A SRIVAISHNAVA DOES NOT ACCEPT ANY OTHER GOD BUT VISHNU.

It is a complex issue. Your link is simplistic. Read for a year, and post a blog next margazi on this question.

Waiting.

Rambling said...

இந்த பாஷ்ய கலப்பில் , பல வியக்கதக்க அவர்கள். மிக்க அருமை

said...

இந்த பாஷய கலவையில், பல வியக்கதக்க வருகள். மிக்க அருமை 👏

ராம் 🙏🏽

said...

இந்த பாஷய கலவையில், பல வியக்கதக்க வருகள். மிக்க அருமை 👏

Keep going 🙏🏽

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails